தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

Tuesday, August 4, 2009


ராஜமார்த்தாண்டன்


கவிதைக்கான காலாண்டிதழ் ஒன்றினைத் தொடங்குவது தொடர்பாக நண்பர் பா.அகிலனுடன் கதைத்துக் கொண்டிருந்த போதுதான் ராஜமார்த்தாண்டன் இறந்த செய்தியைக் கூறினார்.மிகவும் கவலைதருகின்றதான இழப்புணர்வுக்குள்ளானேன். கவிதையிதழை ஈழம் கடந்தும் பரந்த தளத்தில் செய்யவேண்டும் என்ற என் விருப்பினில் அவரின் மரணம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

தமிழகத்திலிருந்தும் ஆளுமைமிக்க படைப்பாளிகளின் கவிதைகளையும் கட்டுரைகளையும் பெறுவதாக ஏற்கனவே தீர்மானங்கொண்டிருந்த எனக்கு, அப்போது ஞாபகம் வந்தவர்களில் ராஜமார்த்தாண்டனும் ஒருவர்.
தமிழின் முக்கிய விமசகர்களில் ஒருவராக அறியப்பட்ட ராஜமார்த்தாண்டன் கவிஞருமாவார்.ஈழத்துப் படைப்புக்கள் பற்றி அதிகமும் அறந்திருக்காத தமிழகச் சூழலில் ராஜமார்த்தாண்டன் ஈழத்துப் படைப்பாளிகள் பலரையும் ஈழத்தின் அரசியற் சூழ்நிலை பற்றியும் அறிந்தவர். தனது “புதுக்கவிதை வரலாறு” என்ற நூலில் ஈழத்துப் புதுக்கவிதைகள் தொடர்பான முக்கியமான பதிவுகளைச் செய்திருக்கின்றார். அவரின் கவிதைத்துறை சார்ந்த தேடலுக்கும் விமர்சனபூர்வமான அணுகுமுறைக்கும் இந்நூல் சான்றாகவுள்ளது.

ஈழத்திலிருந்து வெளிவந்த பல கவிதைநூல்களுக்கு “காலச்சுவடு” சஞ்சிகையில் விமர்சனங்கள் ஏழுதியிருக்கின்றார். ஈழத்தின் அரசியல் நிலைபற்றியதான புரிதல்களின் அடிப்படையில் அவை எழுதப்பட்டுள்ளன. அவரால் தொகுக்கப்பட்ட “கொங்குதேர் வாழ்க்கை” என்ற கவிதைத் தொகுப்பில் ஈழக்கவிதைகளுக்கும் முதன்மை கொடுத்திருக்கின்றார்.
தமிழிலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற ராஜமார்த்தாண்டன் “கொல்லிப்பாவை” இதழின் ஆசிரியராகவும், தினமணியின் உதவி ஆசிரியராகவும் காலச்சுவடு சஞ்சிகையிலும் பணியாற்றியுள்ளார். கவிதைகள் எழுதியுள்ள போதும் கவிதை விமசகராகவும் திறணாய்வாளராகவுமே பல தளங்களிலும் அறியப்பட்டிருக்கின்றார். ராஜமார்த்தாண்டனின் கவிதைகள், நாம் வாழ்க்கையில் சடுதியாக எதிர்கொள்ளும் பல்வேறு தருணங்களையும் மனக்குலைவுகளையும் வெளிப்படுத்துபவை.

ராஜமார்த்தாண்டனின் நூல்களாக “அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதை), என் கவிதை (கவிதை),ராஜமார்த்தாண்டன் கவிதைகள், புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு), புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு)” என்பவையும் “கொங்குதேர் வாழ்க்கை” என்னும் பெயரிலான கவிதைகளின் தொகுப்பு நூலும் வெளிவந்துள்ளன.

யூன் 6 2009 அன்று ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் ராஜமார்த்தாண்டன் காலமானார். ஆளுமை மிக்கவர்களின் மரணத்தின் பின் ஏற்படும் வெற்றிடங்கள் சாதாரணமானவையல்ல. ராஜமார்த்தாண்டனின் இழப்பும் நிரப்ப முடியாத வெற்றிடமாகவே எஞ்சியிருக்கின்றது.

சித்தாந்தன்